தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

தீக்குளித்த பெண்ணின் இருவேறு வாக்குமூலம் - காவல் துறை அதிர்ச்சி! - Tirunelveli District News

தீக்குளித்த பெண் காவல் துறையிடமும், கணவனிடமும் இருவேறு வாக்குமூலம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

woman's confession
woman's confession

By

Published : Jun 24, 2021, 9:57 AM IST

திருநெல்வேலி: வட்டிக்குப் பணம் வாங்கிய நபர் ஒருவரின் மிரட்டலின் காரணமாக தீக்குளித்ததாக பெண் ஒருவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குளி பகுதியைச் சேர்ந்தவர், பிரதாபன். இவர் சென்னையில் உணவகத்தில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேகா (32). இத்தம்பதியினருக்கு பிரவீன் (11), தன்யாஸ்ரீ (7) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

சென்னையில் வேலை பார்த்து வரும் பிரதாபன் ஊருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வருவது வழக்கம். தற்போது கரோனா தொற்று ஊரடங்கு காலமாக இருப்பதால் சென்னையிலேயே அவர் தங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 17ஆம் தேதி பிரதாபனின் மனைவி ரேகா, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது.

அவரது உறவினர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குடும்பச் சூழ்நிலை காரணமாக தீக்குளித்ததாக மாஜிஸ்திரேட், மருத்துவர்கள் முன்னிலையில் காவல் துறையினரிடம் ரேகா வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதற்கிடையில் ரேகா தீக்குளித்த தகவலறிந்து பிரதாபன் சொந்த ஊருக்கு விரைந்து வந்துள்ளார்.

கணவரிடம் சொன்னது:

இந்தச் சூழ்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக தீக்குளித்ததாக காவல் துறையினரிடம் தெரிவித்த ரேகா, திடீரென தனது கணவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கிய நபர் ஒருவரின் மிரட்டலால் தான் தீக்குளித்ததாக வாக்கு மூலம் தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரேகா தனது கணவரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த இளைஞரிடம் ரூ.10 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கினேன். தொடர்ந்து வட்டி கொடுத்து வந்தாலும், தற்போது கணவருக்கு தொழில் முடக்கம் காரணமாக வட்டியைக் கொடுக்க முடியவில்லை.

இதனால் வட்டியை வசூலிக்க வந்த இளைஞர் என்னையும், குடும்பத்தினரையும் அவதூறாகப் பேசி துன்புறுத்தினர்.

மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால், உன்னுடைய குழந்தைகளைக் கொன்று விடுவேன் என்று மிரட்டினர். அதனால் வெளியே சொல்லவில்லை. அவரது அவதூறு வார்த்தைகளால் மனம் நொந்த நான், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தேன்.

என்னைத் தற்கொலைக்கு தூண்டிய அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குமூலம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருவதால், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

காவலர்களிடம் குடும்பப் பிரச்னை காரணமாக தீக்குளித்ததாக வாக்குமூலம் அளித்த பெண் சில நாட்கள் கழித்து, தனது கணவரிடம் வட்டிக்கு கடன் வாங்கிய நபரின் மிரட்டலால் தீ தீக்குளித்ததாக தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காவல் துறை கூறுவது:

இதுகுறித்து வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜிடம் கேட்டபோது, 'சம்பவத்தன்று ரேகா யாரோ ஒரு நபரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். இதுகுறித்து ரேகாவின் மாமனார் ராஜன் யாரிடம் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத்தான் தீக்குளித்ததாக ரேகா முதலில் எங்களிடம் வாக்குமூலத்தில் தெரிவித்தார். ஆனால் திடீரென்று அவரது கணவர் வந்த பிறகு, வேறு ஒரு நபரின் தூண்டுதலால் தீக்குளித்ததாக கூறுகிறார்.

அவரது கணவர் தனிப்பட்ட முறையில் அந்த நபரை, இந்த வழக்கில் தொடர்புபடுத்தும் வகையில் ரேகாவை இதுபோன்று பேச வைத்திருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்து விசாரித்து வருகிறோம். தற்போது வரை இந்தச் சம்பவம் தொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போது ரேகாவுக்கு 72 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: காவலர் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

ABOUT THE AUTHOR

...view details