தர்மபுரி: கடத்தூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட தாளநத்தம் ஊராட்சியில் நொச்சிக்குட்டை, அய்யம்பட்டி, காவேரிபுரம், நடூர், தாளநத்தம், குண்டல்மடுவு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் நொச்சிக்குட்டை அருகே ரெட் ஏரி அமைந்துள்ளது.
இந்த ஏரியில், மழைக் காலங்களில் பெய்யும் மழை, நரசிம்மசாமி மலையில் இருந்து வருகின்ற தண்ணீர் ஆகியவை தேங்கி நிற்கும். அவ்வாறு நிற்கும்போது சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் கிணறுகளில் தண்ணீர் ஊற்றெடுக்கும். இதனால் விவசாயம் செழிக்கும்.
இந்நிலையில், இந்த ஏரியில் தற்போது மழை பெய்தாலும், தண்ணீர் தேங்குவது இல்லை. வருவாய்த் துறையினரின் ஆசியோடு ஏரியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பொக்லைன் மூலம் மண் அள்ளப்பட்டு டிராக்டரில் கடத்தி விற்கப்படுகிறது. சிலர் மணல் கடத்தலை தொழிலாகவே செய்து வருகின்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி தாலூகாவுக்குள்பட்ட பகுதிகளில் வருவாய் துறையினரின் ஆசியுடன் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் பகுதியிலுள்ள ஏரிகளில் மண், மணல் நரம்பு உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், வருவாய் துறை அலுவலர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு இதுகுறித்து கண்டு கொள்வதில்லை என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.