சென்னை: ராயப்பேட்டை யானைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனரான அப்துல் காதர்(42). இவருக்கும் ராயப்பேட்டை முகமது உசேன் தெருவைச் சேர்ந்த கௌசி நிஷா(48) ஆகிய இருவருக்கும் பத்தாண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது.
கௌசி நிஷாவுக்கு முதல் திருமணம் நடைபெற்று கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இரண்டாவது கணவராக அப்துல் காதரை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் கௌசி நிஷாவின் மீது சந்தேகப்பட்டு அப்துல் காதர் அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கௌசி நிஷா, அப்துல் காதரை பிரிந்து ராயப்பேட்டையில் உள்ள அவரது தந்தையின் இல்லத்தில் வசித்துள்ளார்.
அவ்வவ்போது சென்று சமாதானம் செய்து கூப்பிட்டு பார்த்தும் கௌசி நிஷா அப்துல்காதருடன் சேர்ந்து வாழ்வதற்கு தயாராக இல்லை என கூறியதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நேற்று (மே 8) மாலை 5.30 மணியளவில் கௌசி நிஷாவை அழைப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றபோது கௌசி நிஷா, அவரது தந்தை முசாபர்(80), அப்துல் காதர் ஆகிய மூவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அப்துல் காதர் குக்கர் மூடி, பீர் பாட்டில் ஆகியவற்றை பயன்படுத்தி அவரது மனைவியையும், மாமனாரையும் தலையில் பலமாக தாக்கி விட்டு, அதன்பின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து இருவரின் கழுத்தையும் அறுத்து கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அந்த வீட்டில் இருந்த அவரது 8 வயது மகளை மீட்டுவிட்டு அப்துல் காதரை வீட்டிற்குள் அடைத்து கதவை பூட்டிவிட்டு ஜாம்பஜார் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இதன்பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவலர்கள் இருவரின் உடலையும் உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்த அப்துல் காதரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், கௌசி நிஷாவுக்கும் அவரது முதல் கணவருக்கும் பிறந்த 21 வயதான பெண் பிள்ளையை கௌசி நிஷா தவறான பாதையில் அழைத்து செல்வதாக ஏற்பட்ட சந்தேகத்தால் கௌசி நிஷாவையும், அவரது தந்தையையும் அடித்துக் கொன்றதாக அப்துல் காதர் கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அப்துல் காதரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கூலித் தொழிலாளி கொலை: பக்கத்து வீட்டுகாரர் கைது