சென்னை: நகை கொள்ளையில் கைது செய்யப்பட்ட நபருக்கு தீவிரவாத அமைப்போடு தொடர்புடையதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை, பட்டாளம் ஸ்டிராஹன்ஸ் சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுராஜ் ஜெயின். இவர் சவுகார்பேட்டையில் தங்க நகைகள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 5ஆம் தேதியன்று சவுகார்பேட்டை கடையிலிருந்து ரூ. 7 லட்சம் பணம், 282 கிராம் தங்க நகைகளுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பெரியமேடு அல்லிக்குளம், லிங்க் ரோடு அருகே சுராஜ் சென்று கொண்டிருந்த போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் சுராஜை வழிமறித்து, தாக்கி அவர் வைத்திருந்த ரூ.7 லட்சம், 282 கிராம் தங்க நகைகள் அடங்கிய பையை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து சுராஜ், பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு அருகில் பொருத்தப்படிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து, கொள்ளையில் ஈடுபட்ட ராயப்பேட்டையைச் சேர்ந்த சபியுல்லா யாசின் என்பவரை கடந்த 10ஆம் தேதி பெரியமேடு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொள்ளையடித்த ரூ. 7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.