புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில், கடந்த சில மாதங்களாக தொடந்து செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற குற்றசம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, உடனடியாக குற்றவாளிகளைப் பிடிக்க, பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் தலைமையில், திருமயம் காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையையும் நியமித்தார்.
அதன்படி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த தனிப்படையினர், பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கண்காணித்தனர். அதில் அறந்தாங்கி, திருநாலூர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (19), மகாவிஷ்ணு (21) ஆகிய இரண்டு இளைஞர்கள் இக்குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இவர்கள் இருவரையும் தனிப்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.