சென்னை: நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா தொற்றின் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கான வகுப்புகளை ஆன்லைனில் நடத்துமாறு அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான அரசு, தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தி வந்தனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகளை ஆன்லைனில் நடத்துமாறு அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான அரசு, தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தி வந்தனர்.
கனிமொழியின் குரல்
இதேபோல் சென்னை கே.கே. நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியும் மாணவ, மாணவிகளுக்காக ஆன்லைன் வகுப்பு நடத்தி வந்தனர். இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதனால், இச்சம்பவம் காட்டுத்தீ போல் பரவியதைத் தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலரும் இவ்விவகாரத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தானாக விசாரணைக்கு முன்வந்த துணை ஆணையர்
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை எந்த முறையான புகாரும் காவல் துறைக்கு வரவில்லை என்றாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி சம்பந்தப்பட்ட பள்ளியில் சென்று நேரடியாக விசாரணை நடத்தினார்.
ஆன்லைன் வகுப்பில் சேட்டை செய்த ஆசிரியர்
ஆன்லைன் வகுப்பை நடத்தும் இந்தப் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் என்பவர் மாணவிகளிடம் ஆபாசமாகவும், அவதூறாகவும் பாலியல் உணர்வுகளுடன் குறுஞ்செய்தி, படங்கள் ஆகியவற்றை அனுப்பியது சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவியது. மேலும், மாணவியருக்கு ஆபாச இணையதளங்களில் வீடியோக்களுக்கான இணைப்பையும் பகிர்ந்து மாணவிகளிடம் தவறாகப் பேசியுள்ளார்.
இந்நிலையில், துணை ஆணையர் ஜெயலட்சுமி ஆசிரியர் ராஜகோபாலின் விவரங்களை பள்ளியில் உள்ளவர்களிடம் கேட்டுப் பெற்றார். மேலும் அவருடைய தொலைபேசி எண்கள் முதலியவற்றையும் வாங்கி அதன் மூலம் தொடர்புகொண்டு விசாரணை நடத்தினார்.
பள்ளி நிர்வாகத்தின் கடிதம்
இதனிடையே, பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் இந்தச் சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், இது தங்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்படவில்லை என்றும், இது தொடர்பாக பள்ளியின் சார்பில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் விசாரணை முடிவில் குற்றச்சாட்டுகள் உறுதியான பின்பு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்
இந்தப்பள்ளியின் புரவலரான (TRUSTEE) ஒய்.ஜி.மகேந்திரன் அளித்துள்ள விளக்கத்தில், "இது மிக அதிர்ச்சிகரமான சம்பவம். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.
ஆசிரியர் பணியிடைநீக்கம்
இதன்பின்னர், ஆசிரியர் ராஜகோபாலனை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும், ராஜகோபாலன் இடைநீக்கம் செய்யப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொதுவெளிக்கு வரும் பாலியல் புகார்கள்
மேலும், சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்தீர் ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் ராஜகோபாலன் இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, மாணவிகள் தங்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் குறித்து பொதுவெளியில் பேச முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: PSBB பள்ளி ஆசிரியர் பாலியல் புகார் தொடர்பாக பள்ளியில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி