சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்த காவல்துறையினர் மாநிலம் முழுவதும் போதைப் பொருள்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் போதை மாத்திரைகளின் புழக்கம் சமீப காலத்தில் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. இதுபோன்ற போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பல்களை போலீசார் கண்டுபிடித்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் மூன்று 3 கைது செய்துள்ளனர். வேளச்சேரியைச் சேர்ந்த ஜோஸ்வா, ராஜ்குமார், விக்னேஷ் என்பது தெரியவந்துள்ளது. இந்த கும்பல் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரை தொடர்பு கொண்டுள்ளனர்.
குறிப்பாக வீட்டிலுள்ள நகைகள், வெள்ளி பாத்திரங்கள் ஆகியவற்றை அடகுவைத்து போதை மாத்திரைகள் வாங்குவதாகவும், இதனால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் போதைக்கு அடிமையான மகன்களின் செல்போன் எண்களை போலீசாரிடம் கொடுத்துள்ளனர். அந்த செல்போன் எண்களின் அழைப்புகளை ஆய்வு செய்து போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நபரை செல்போன் சிக்னல்கள் மூலம் ஜோஸ்வா என்ற நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.
ஜோஸ்வா கொடுத்த தகவலின் அடிப்படையில் மீதமுள்ள ராஜ்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோரையும் பிடித்த போலீசார் போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திராவில் இருந்து வாங்கிக் கொண்டு சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக பள்ளி முடிந்த பிறகு வேளச்சேரி, தரமணி, கிண்டி ஆகிய குறிப்பிட்ட ஜங்சனில் மட்டுமே போதை மாத்திரைகள் மாற்றுவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் சென்னையில் மருந்து கடைகளில் மாத்திரைகள் கிடைக்காததால் ஆந்திராவிற்கு சென்று ஐம்பது ரூபாய்க்கு பத்து மாத்திரைகள் அடங்கிய ஸ்ட்ரிப்புகளை மொத்தமாக வாங்குவதாக தெரிவித்துள்ளனர். சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.