தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

கோடநாடு வழக்கில் இபிஎஸ், சசிகலாவை விசாரிக்கக் கோரிய மனு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு - ஜெயலலிதா கோடநாடு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வி.கே. சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு வழக்கு, கோடநாடு கொலை கொள்ளை வழக்கு, நீதிமன்ற செய்திகள், kodanad murder case, kodanad theft case, ஜெயலலிதா கோடநாடு, எடப்பாடி பழனிசாமி
கோடநாடு வழக்கு

By

Published : Sep 3, 2021, 4:03 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 23 அன்று நள்ளிரவில், ஓம் பகதூர் என்ற பாதுகாவலரை கொலைசெய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கூடலூர் சுனில் ஆகிய ஒன்பது பேரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல்செய்துள்ளனர்.

அதில், இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சரின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் நடந்த கொள்ளையில், கோடநாடு எஸ்டேட்டிலிருந்து காணாமல்போன பொருள்கள் எவை என்பது குறித்து சசிகலா, இளவரசிக்குத்தான் தெரியும் எனவும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கியக் குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் கூடுதலாக சிலரை எதற்காக விசாரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை மனுதாரர்கள் விளக்கமாகக் கூறவில்லை என நீதிபதி சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக மனுதாரர்கள் விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், மூவரின் வழக்கு குறித்து மூன்று வாரங்களில் சோலூர்மட்டம் காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details