சென்னை: தியாகராய நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வெளிநாடுகளுக்கு துணிவகைகள் ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். அதற்கென மத்திய அரசின் வெளிநாட்டு வணிகம் தொடர்பான இணையதள முகப்பில் கணக்கு வைத்துள்ளார்.
மத்திய அரசின் முகப்பை ஹாக் செய்த மோசடி நபர்கள்
இந்நிலையில் மத்திய அரசு அவருக்குக் கொடுத்த ’இன்சென்டிவ் பாயிண்டுகளை’ அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மோசடி நபர்கள் மாற்றியுள்ளனர். இதனால் தொழிலதிபருக்கு 78 லட்சத்து 32 ஆயிரத்து 444 ரூபாய் பறிபோயுள்ளது.
இதுகுறித்து தொழிலதிபர் சென்னை காவல் ஆணையர் அலுவலத்திலுள்ள மத்திய குற்ற பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை, டி.ஜி.எப்.டி போர்டல் ஐபி விவரங்கள், மோசடி நபர்களால் மாற்றியமைக்கப்பட்ட மொபைல் எண்,இமெயில் ஐடி ஐ.பி விவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
மோசடி நபர்கள் கைது
இதன்மூலம் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் டெல்லியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை தனிப்படை அமைத்து டெல்லி சென்று அருண் குமார்(41), சச்சின் கார்(43) ஆகிய இருவரைக் கைது செய்து மோசடி செய்ய பயன்படுத்திய 2 லேப்டாப்கள், 9 செல்போன்கள், ஒரு பென்ட்ரைவ் மற்றும் 6 சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட பர்வீன் அகர்வால், மனிஷா அகர்வால் ஆகிய இருவரையும் அரியானா காவல்துறையினர் வேறொரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இருவரையும் விரைவில் தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அருண் குமார் மற்றும் சச்சின் கார் ஆகிய இருவரும் சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெருகி வரும் சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:விமான நிலையத்தில் பல லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம், நகைகள் பறிமுதல்