சென்னை:மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று (ஆகஸ்ட் 19) இரவு, 156 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அந்த விமானத்தில் மனைவியுடன் பயணம் செய்த மலேசியா நாட்டைச் சேர்ந்த கோபாலன் அழகன் (52) என்பவர், தன்னுடைய கைப்பையில் மறைத்து வைத்திருந்த சிகரெட் மற்றும் சிகரெட் லைட்டரை எடுத்து விமானத்துக்குள்ளேயே புகைபிடிக்க தொடங்கியுள்ளார்.
இதற்கு சக பயணிகள் கடுமையாக எதிா்ப்பு தெரிவித்தனா். அதோடு விமான பணிப்பெண்களும் கோபாலன் அழகனிடம் வந்து, விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி விமானத்திற்குள் புகை பிடிப்பது குற்றம். எனவே உடனடியாக புகை பிடிப்பதை நிறுத்துங்கள் என்று கூறினர். ஆனால் அவர் புகை பிடிப்பதை நிறுத்தவில்லை. அவர் தொடர்ந்து புகை பிடித்துக் கொண்டு இருந்தார்.
மேலும் கோபாலன் அழகனின் மனைவியும், அவரிடம் புகைப்பிடிப்பதை நிறுத்தும் படி கூறினாா். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல், ‘என்னுடைய விருப்பம் நான் புகைபிடிப்பேன்’ என்று கூறிக்கொண்டு, தொடர்ந்து புகைப்பிடித்தாா்.
இதையடுத்து விமான பணிப்பெண்கள், விமான கேப்டனிடம் புகாா் செய்தனா். உடனடியாக கேப்டன், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டார். விமானத்துக்குள் ஒருவர் புகை பிடித்து ரகளை செய்கிறார். எனவே விமானம் சென்னையில் தரையிறங்கியதும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினாா்.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு அலுவலர்கள், விமானநிலைய ஓடுபாதை அருகே தயார் நிலையில் இருந்தனர். விமானம் சென்னையில் தரையிறங்கியதும், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, கோபாலன் கோபாலன் அழகனை விமானத்திலிருந்து இறக்கின்றனர். அதோடு அவருடைய உடைமைகளும் இறக்கப்பட்டன. அவருக்கும், மனைவிக்கும் சுங்கச் சோதனை, குடியுரிமை சோதனை, பாதுகாப்பு பரிசோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்தனா். அதன்பின்பு அவரை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை விமான நிலைய காவல்ர்கள் கோபாலன் அழகனிடம் விசாரணை நடத்திய போது, அவர் நான் புகைபிடித்ததில் தவறு எதுவும் இல்லை, புகை பிடிக்கக் கூடாது என்று எந்த விதியும் இல்லை என்று வாக்குவாதம் செய்தார். இதை அடுத்து சென்னை விமான நிலைய காவலர்கள், கோபாலன் அழகன் மீது, விமான பாதுகாப்பு மற்றும் சக பயணிகளுக்கு இடையூறு உட்பட சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனா். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கிணற்றில் விழுந்தவரை மீட்கக்கோரி வந்த போன்கால்... நீரில் இறங்கிய மீட்புத்துறையினர்.... இறுதியில் கிடைத்த ட்விஸ்ட்