திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்நல்லாத்தூர் ஊராட்சியில், ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தவர் பாஸ்கர். இவர் கடந்த 25 ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில், ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தார்.
வழக்கம்போல் இன்று (பிப்.6) ஊராட்சி அலுவலகம் சென்று பணியில் ஈடுபட்டார். இந்நிலையில், பிற்பகல் 2.30 மணியளவில் ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் தாலூகா காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஊராட்சி செயலாளர் எழுதி வைத்திருந்த கடிதம் காவல்துறையிடம் சிக்கியது. அதில், "ஊராட்சி மன்ற தலைவர் என்னை கடுமையாக தொல்லை செய்து வருகிறார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இந்த முடிவுக்கு வந்தேன்" எனக் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிபாபுவின் மீது திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனிடையே ஊராட்சி செயலாளரின் உறவினர்கள் மற்றும் சங்கப் பணியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திருவள்ளூர் அரசு மருத்துவமனை முன்பு திருவள்ளூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:வாகனத்தை விரட்டி வந்த குட்டியுடன் இருந்த யானைக் கூட்டம்!