சென்னை:தாம்பரம் அடுத்த கடப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன் (30). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், வேலை முடித்துவிட்டு அதிகாலை தாம்பரம் பேருந்து நிலையம் அருகே ஜி.எஸ்.டி சாலை வழியாக, வீட்டிற்கு அர்ஜுன் நடந்து சென்றுள்ளார்.
Also read:மேட்ரிமோனி மூலம் மோசடி செய்த நைஜீரியர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை!
அப்போது அதிவேகமாக வந்த கார் அர்ஜுன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி விசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கு இருந்த பொதுமக்கள் விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அத்தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல் துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதிவேகமாகச் சென்று சாலையில் நடந்து சென்றவர் மீது கார் மோதும் காட்சி விசாரணையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்த நபர், பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.