திருவள்ளூர்: மின் இணைப்பை துண்டித்து ஒருவரை சரமாரியாக கத்தியால் தாக்கியதில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருத்தணி நேரு நகரை சேர்ந்த அமீத் என்பவரும், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் தீனா ஆகிய இவரும் நண்பர்கள். இந்நிலையில் அமீத் என்பவர் பச்சை குத்துவதற்காக நண்பர் தீனாவை திருத்தணிக்கு அழைத்துள்ளார். தீனா நேரு நகருக்கு வந்த பின், அமீத் அவரது நண்பர்களான கொக்கி குமார், சுரேந்திரன், ஜகன் உள்பட ஏழு பேர், தீனாவுடன் சேர்ந்து திருத்தணி வள்ளி நகர் பகுதியில் கஞ்சா பிடித்துள்ளனர்.
அப்போது, அமீத்துக்கும் தீனாவுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, போதையில் இருந்த அமீத் அவரது நண்பர்கள் அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, கத்தியாலும் மதுபாட்டிலை உடைத்தும் தீனாவை கழுத்து, முகம் உள்பட பல்வேறு இடங்களில் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரைக் கண்டதும் மூன்று பேர் அங்கிருந்து தப்பியதால், நான்கு பேரை காவல்துறையினர் பிடித்தனர். பின்னர் பலத்த காயமடைந்த தீனாவை சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அமீத்துக்கும் தீனாவுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இவர்கள் கஞ்சா, மதுபானங்களை ஆந்திர மாநிலம் ஓ.ஜி குப்பத்தில் இருந்து வாங்கி வந்து விற்பதில் தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் அமீத், கொக்கி குமார், ஜெகன், சுரேந்தர் ஆகிய நால்வரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீதமுள்ள மூன்று பேரை தேடி வருகின்றனர். பிடிபட்டவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா, இரண்டு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு - ஆந்திர எல்லையோர பகுதியான ஓ.ஜி குப்பம் கிராமத்திலிருந்து, கஞ்சா, மதுபானங்கள் ஆகியவை திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து அதிகளவில் விற்பனை செய்து வருவதால், அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. எனவே காவல்துறையினர் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நாளையுடன் மின் கட்டண கால அவகாசம் முடிவு!