திருவாரூர்:ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்கள் வணிக வளாக உரிமையாளரைக் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவாரூர் அருகே உள்ள கூடூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன் (60). இவருக்குச் சொந்தமான வணிக வளாகம் திருவாரூர்- திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.
நேற்று (ஜூன் 19) காலை 1.30 மணி அளவில் ஏ.டி.எம். மையத்தில் இருந்து சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது பொதுமக்களை கண்டதும் ஏ.டி.எம். மையத்தில் இருந்த 4 இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றனர்.
நண்பனை மீட்க கொலை
இதனால் சந்தேகமடைந்த மக்கள் அவர்களை விரட்டி சென்றனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வந்தனர். அவர்களிடம் தப்பி ஓடிய ஒரு இளைஞர் மட்டும் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்த மதன்(வயது 18) என்பது தெரிய வந்தது. அவரை காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர்.
அப்போது தப்பிச்சென்ற மதனின் கூட்டாளியான இளமங்கலம் பகுதியை சேர்ந்த பிரதாப்(20) தனது இருசக்கர வாகனத்தில் சம்பவ இடத்துக்கு மதனை மீட்பதற்காக வந்தார். அப்போது பிரதாப்பை வணிக வளாக உரிமையாளர் தமிழரசன் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதாப் தனது கையில் இருந்த திருப்புளியால் தமிழரசனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.