பலாங்கீர் : புத்தாண்டு மாலை விருந்துக்கு ஆடுகள் திருடிய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட ஆடுகள் மீது பாசத்தை பொழிந்த அந்த பாசக்கார சப்-இன்ஸ்பெக்டர் பெயர் சுமன் மாலிக். இவர் ஒடிசா மாநிலம் பலாங்கீர் மாவட்டத்தில் உள்ள சிந்தேகேலா காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
ஆடுகள் திருட்டு
இந்நிலையில் டிச.31ஆம் தேதி மாலை உள்ளூர்காரரான சங்கீர்த்தன குரு என்பரின் இரு ஆடுகளை சுமன் மாலிக் ஆட்டையைப் போட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சுமன் மாலிக் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.
சப்-இன்ஸ்பெக்டர் சுமன் மாலிக் அவரிடம் நடத்திய விசாரணையில் ஆட்டையை போட்ட இரண்டு ஆடுகளையும் புத்தாண்டு விருந்துக்கு பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார்.
நிஜமான விவேக் நகைச்சுவை
இதையடுத்து அவரை உயர் அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற சிங்கம் படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி வரும். அந்தக் காட்சியில் போலீஸ்காரரான விவேக், ஆட்டை திருடி சக காவலர்களுக்கு பிரியாணி விருந்து வைத்திருப்பார்.
பாதிக்கப்பட்ட விவசாயி கையில் ஆட்டுப் புழுக்கையுடன், சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் என்ற என காவல் நிலையத்தில் புகார் அளிப்பார். இந்தக் காட்சி தற்போது நிஜத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிசிடிவியில் சிக்கிய ஆடு, மாடு திருடும் கும்பல்!