திருநெல்வேலி என்றாலே அல்வாவுக்கும் பேமஸ் அரிவாளுக்கும் பேமஸ் என்பார்கள். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நெட்டிசன்கள் இந்தச் சொல்லைப் பெருமைக்காகப் பயன்படுத்தினாலும்கூட அவ்வப்போது இங்கு நடைபெறும் கொடூரமான கொலைச் சம்பவங்கள் அந்தச் சொல்லுக்கு உயிர் ஊட்டும் வகையில் அமைகின்றன.
அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களில் அடுத்தடுத்து ஐந்து கொலைச் சம்பவங்கள் அரங்கேறிய சம்பவம் காவல் துறை, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொடூரக் கொலை
கோபாலசமுத்திரம் பகுதியிலுள்ள குளத்தின் அருகில் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக செப்டம்பர் 15 அன்று அதிகாலை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து விரைந்துசென்ற காவல் துறையினர் அங்கு கிடந்த உடலைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர்.
கொலையானவரின் கை கால் துண்டிக்கப்பட்டதுடன், அவரது தலையையும் கொலையாளிகள் அறுத்து எடுத்திருக்கிறார்கள். பின்னர் தலையைச் சற்று தூரம் தூக்கிச் சென்ற கொலையாளிகள் அதைக் குளத்தின் அருகில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். சிறிது நேரத் தேடலுக்குப் பின்னர் கொலையானவரின் தலையை காவலர்கள் மீட்டனர்.
கொலையானவரின் உடலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்த காவல் துறையினர் விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்துக்கு டிஐஜி பிரவீன்குமார் அபினவ், எஸ்.பி. மணிவண்ணன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணையைத் தீவிரப்படுத்தினார்கள்.
விரட்டி விரட்டி கொலை
முதற்கட்ட விசாரணையில், கொலையானவர் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பதும், அவர் விவசாயப் பணிகளுக்கு இயந்திரம் அனுப்பும் தரகர் வேலை செய்ததும் தெரியவந்தது. வழக்கம்போல, விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாலையில் வீட்டிலிருந்து பைக்கில் வெளியே சென்றுள்ளார்.
கோபாலசமுத்திரம் குளத்தின் கரையில் சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்த அடையாளம் தெரியாத கும்பல் சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டியிருக்கிறது. முதலில் கையில் வெட்டியதும், கை துண்டானதால் அவர் தடுமாறியிருக்கிறார். பைக்கை ஓட்ட முடியாமல் கீழே விழுந்த அவர் எழுந்து ஓட முயன்றபோது அவரது காலில் வெட்டியிருக்கிறார்கள்.
அதன் பின்னர் கொடூரமாக அவரை வெட்டிக் கொன்ற அந்தக் கும்பல் அவரது கழுத்தை அறுத்து தலையைத் துண்டாக்கியதுடன், அதை எடுத்துச் சென்றிருக்கிறது. சிறிது தூரத்துக்குத் தலையுடன் சென்ற கும்பல் பின்னர் குளத்தின் கரையில் வீசிவிட்டுச் சென்றுவிட்டது.
சாதிய கொலைகள்
கடந்த 13ஆம் தேதி நெல்லை கீழசெவல் நயினார் குளத்தில் வசிக்கும் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த சங்கர சுப்ரமணியன் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.