சென்னை: போதைப்பொருள் தடுப்பு பிரிவு (Narcotics Control Bureau) அலுவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் போதைப்பொருள் மற்றும் கஞ்சா கடத்தப்படுவதாக தெரியவந்தது.
இதனடிப்படையில், தென்மாநில பகுதிகளில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில், மூன்று ஆப்ரேஷன்களில் பல்வேறு விதமான போதைப் பொருள்கள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேங்காய் நாரில் கஞ்சா
இது குறித்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், வேலூர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகில் கிருஷ்ணகிரி சாலையில் வைத்து அலுவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அப்போது, வாகனம் ஒன்றை சோதனை செய்தபோது 212.5 கிலோ கஞ்சாவை தேங்காய் நாரில் வைத்து கடத்தி சென்றது தெரியவந்தது.
கஞ்சா கடத்திச் சென்ற இரண்டு பேரை கைது செய்தனர். கஞ்சா கடத்தி வருவதற்கு பாதுகாப்பாக இனோவா காரில் வந்த மேலும் இருவரை சினிமா பாணியில் துரத்திப் பிடித்து அலுவலர்கள் கைது செய்துள்ளனர். இவர்கள் கஞ்சாவை வாங்க வந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
வானிலையை சாதமாக்கி கடத்த திட்டம்
ஆந்திராவில் இருந்து இந்த கஞ்சாவை கடத்தி ஈரோட்டில் சில்லறை விலையில் விற்பனை செய்வதற்கு கொண்டுவரப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது. கஞ்சாவை வாங்க வந்த இருவரும் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
குறிப்பாக, வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கிய காரணத்தினால் சென்னை, ஆந்திரா பகுதிகளில் கனமழை மற்றும் புயல் உருவாகக்கூடிய வாய்ப்பாக இருந்தது. இந்நிலையில் ஆந்திராவில் இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பல், வாகனத்தில் கஞ்சாவை கடத்தினால் அலுவலர்கள் சோதனை செய்து கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று திட்டம் தீட்டி கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.