தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

Chennai Crime: 5 நாள் குழந்தையை விற்ற தாய்; விற்ற பணமும் பறிப்பு - கைகுழந்தையை விற்ற தாய்

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்குப் பிறந்த ஐந்து நாள்களே ஆன குழந்தையை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டுத் திரும்பும்போது, குழந்தை விற்ற பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச்சென்றனர்.

Chennai Crime, person robbed money from mother who sold her infant in Chennai, chennai crime rate, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
Chennai Crime

By

Published : Nov 28, 2021, 6:41 AM IST

சென்னை: சென்னை புழல் காவாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் யாஸ்மின் (28). இவர் நேற்று (நவம்பர் 27) மதியம் தனது மகளுடன், புளியந்தோப்பு ஆடு தொட்டி அருகே ஆட்டோவில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் முகவரி கேட்பதுபோல் தனது பணப்பையைப் பறித்துச் சென்றதாக நேற்றிரவு வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மதியம் நடந்த பறிப்புச் சம்பவத்திற்கு காலதாமதமாக இரவு நேரத்தில் வந்து யாஸ்மின் புகார் அளித்தது காவல் துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, புகார் அளித்த யாஸ்மினிடம் காவலர்கள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

கலைக்கச் சென்ற இடத்தில் விற்க ஏற்பாடு

அதாவது, யாஸ்மினுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு மோகன் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், யாஸ்மின் இரண்டாவது முறையாக ஐந்து மாதம் கருவுற்று இருந்தபோது கருத்து வேறுபாடு காரணமாக மோகன் அவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த யாஸ்மின் தனது குழந்தையை வளர்க்க முடியாமலும், பிறக்க உள்ள குழந்தையை எண்ணியும் வருத்தமடைந்துள்ளார். மேலும், யாஸ்மினுக்கு மூச்சுக் கோளாறு பிரச்சினை இருந்துவந்ததது

இதனால் சிகிச்சைக்காக எல்லீஸ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார். அப்போது எண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஜெயகீதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் குழந்தையைக் கலைக்க ஆலோசனை கேட்டபோது குழந்தையை அதிக விலைக்கு விற்க ஏற்பாடு செய்துதருவதாக கூறியுள்ளார்.

குழந்தையும் போச்சு; பணமும் போச்சு

இதனையடுத்து, நவம்பர் 21ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் யாஸ்மினுக்கு ஆண் குழந்தை பிறந்து, 25ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து, ஜெயகீதா கைக்குழந்தையுடன் புரசைவாக்கம் பகுதிக்கு வரக் கூறியதால் யாஸ்மின் நேற்று மதியம் அங்கு சென்றுள்ளார். அப்போது ஜெயகீதாவின் நண்பரான தனம் அழைத்துவந்த இரண்டு நபர்கள் வெற்று முத்திரைத் தாளில் யாஸ்மினிடம் கையொப்பம் வாங்கிவிட்டு கவரில் பணம் அளித்துவிட்டு குழந்தையைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

பின்னர், பணப்பையுடன் யாஸ்மின் தனது மகளுடன் புளியந்தோப்பு ஆடு தொட்டி அருகே ஆட்டோவில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் ஆட்டோ ஓட்டுநரிடன் விலாசம் கேட்பதுபோல் யாஸ்மினின் கையிலிருந்த பணப்பையைப் பறித்துச் சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த யாஸ்மின் வேறு வழியின்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தது தெரியவந்தது.

தற்போது, காவலர்கள் பிறந்த குழந்தையை வாங்கிச் சென்ற நபர்களையும், பணத்தைப் பறித்துச் சென்ற நபர்களையும் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் தேடிவருகின்றனர். மேலும், குழந்தையை வாங்கிச் சென்றவர்கள் ஏற்பாடுசெய்த நபர்கள் பணத்தைப் பறித்துச் சென்றனரா போன்ற கோணங்களிலும் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் நில அபகரிப்பு, ஐவர் கைது

ABOUT THE AUTHOR

...view details