ஈரோடு: மோடி உருவப்படம் அச்சிடப்பட்ட பேனர் எரிக்கப்பட்டதால் நஞ்சப்ப செட்டி புதூர் கிராமத்தில் பதற்றம் நிலவியது.
தமிழ்நாட்டில் ஏழு உட்பிரிவுகள் அடக்கிய சமூகங்களை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. இதனை ஏற்ற மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் அங்கீகரித்து அதற்கான அரசாணையை வெளியிடப்பட்டது.
இதற்காக ஈரோடு மாவட்டம் நஞ்சப்பசெட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் படத்துடன் கூடிய நன்றி அறிவிப்பு பேனரை அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே வைத்திருந்தனர்.
இச்சூழலில் இந்த பேனரை நேற்றிரவு (பிப்.25) அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, பேனரை எரித்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.