மயிலாடுதுறை: கள்ளச்சாராயம் குடித்த இருவர் கண்பார்வைப் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, நான்கு தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேந்தங்குடியைச் சேர்ந்தவர் அச்சகத் தொழிலாளியான பிரபு(33). இவர், அதே பகுதியைச் சேர்ந்த அம்மாசி மகன் சுமைத்தூக்கும் தொழிலாளியான செல்வம்(36), வீராசாமி(52), சரத்குமார் (28), செந்தில்(40), சரண்ராஜ்(32) ஆகிய ஐந்து பேருக்கும் கள்ள சாராயத்தை வாங்கிக் கொடுத்து, தானும் குடித்துள்ளார்.
கள்ளச்சாராயத்தைக் குடித்த பிரபு, செல்வம் ஆகிய இருவருக்கும் திடீரென கண் பார்வைப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பிரபுவை அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சேர்த்தனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி பிரபு உயிரிழந்தார். தொடர்ந்து செல்வமும் பரிதாபமாக வீட்டிலேயே உயிரிழந்தார். இதில் அதிர்ச்சியடைந்த வீராசாமி, சரத்குமார், செந்தில், சரண்ராஜ் ஆகியோரின் உறவினர்கள், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நால்வரையும் சேர்த்தனர்.