மதுரை:சோழவந்தானை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து whatsapp மூலம் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வருவதாக மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் சம்பந்தமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் பொன்மீனா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இதில் பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய மதுரை மாவட்டம் சோழவந்தான் ஒட்டுபச்சேரியை சேர்ந்த சின்னக்காளை என்பவரின் மகன் முருகன் என்பவரை அதிரடியாக கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், ”மதுரை மாவட்டத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும், சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடுக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், பொது மக்கள் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருக்கவும், சைபர் குற்றங்களால் பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் அது குறித்து அச்சமின்றியும், தயக்கம் இன்றியும் காவல் துறையினரை அணுகி புகார் அளிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நடிகை மீரா மிதுன் தலைமறைவு - நீதிமன்றத்தில் காவல்துறையினர் விளக்கம்