கொல்லம் : முகநூலில் போலி கணக்கு தொடங்கி தனது உறவுக்கார பெண்ணிடம் ஆண் போல் ஜாலியாக அரட்டையடித்த இரு பெண்களின் செயலால் மூன்று உயிர்கள் பலியாகியுள்ளன.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி (2021) மாதம் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று புதரிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்ட இந்தக் குழந்தை சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தது. இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தார்கள்.
அப்போது புதரில் வீசப்பட்ட குழந்தை கல்லுவாதுக்கலைச் சேர்ந்த ரேஷ்மா என்பவரின் குழந்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷ்மாவிடம் காவலர்கள் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது ரேஷ்மாவிற்கு அனந்து என்பவர் முகநூலில் பழக்கமானதாகவும், அவருடன் சென்று புதிய வாழ்க்கையை தொடர ரேஷ்மா பிறந்த குழந்தையை தவிக்க விட்டு சென்றதும் தெரியவந்தது.
ரேஷ்மாவின் கணவர் வெளிநாட்டில் உள்ளார். அதேநேரம் அனந்தையும் ரேஷ்மா நேரில் பார்த்தது இல்லை. முகமறியா முகநூல் காதலை நம்பி, பெற்ற பிள்ளை என்றும் பாராமல் ரேஷ்மா கல் நெஞ்சத்துடன் நடந்துள்ளார்.
இந்த வழக்கு இத்துடன் முடியவில்லை. அதன்பின்னர்தான் பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அனந்து என்ற நபர் உண்மையில் ஆண் இல்லை. ரேஷ்மாவை கிண்டல் மற்றும் பரிகாசம் செய்ய ரேஷ்மாவின் உறவுக்கார பெண்களான ஆர்யா மற்றும் க்ரீஷ்மா ஆகியோர்தான் இவ்வாறு செய்துள்ளனர்.
இதையடுத்து இரு பெண்களுக்கும் காவலர்கள் நோட்டீஸ் அளித்தனர். இதைப் பார்த்து பயந்து போன இரு பெண்களும் ஆற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டனர். பாதிக்கப்பட்ட ரேஷ்மா நீதிமன்ற காவலில் உள்ளார்.
இதையும் படிங்க : காவலர் பெயரில் போலி பேஸ்புக்!