கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியைச் சேர்ந்த பென்சிகர் என்பவருக்கு சொந்தமான மேரி மாதா என்ற விசைப்படகில் தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் கேரள மாநிலம் கொல்லம் அருகே கொச்சி, தொப்பும்படி மீன்பிடித் துறைமுக கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் வழக்கம்போல் நேற்று(ஜன.23) இரவு கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்குத் திரும்பி துறைமுகத்தை வந்தடைந்தனர். அப்போது கேரளாவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அடங்கிய கேரள மீனவர் கும்பல் திடீரென தூத்தூர் மீனவர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர்.
தமிழ்நாடு மீனவர்களை தாக்கிய கேரள மீனவர்கள் இதில் சுர்ளிங் என்ற மீனவரை கடுமையாக தாக்கிய போது அவரது மகன் சஜின் தடுக்க முயற்சிக்க, இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த இருவரும் தற்போது கொல்லம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து கேரள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மீனவர்கள் தமிழ்நாடு மீனவர்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாடு மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்களால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!