கரூர்:மண்மங்கலம் அருகே செம்மடை சிட்கோ தொழில் மையத்தில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அங்கு, சோபிகா இன்பாக்ஸ் என்னும் கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தில், குளித்தலை மேலப்பட்டியை சேர்ந்த வினோத் (20) பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கொசுவலை நிறுவனத்திற்குள், கொசுவலையை ஏற்றுவதற்காக, ஈச்சர் வாகனத்தின் ஓட்டுநர் பின்புறமாக வாகனத்தை ஓட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனம் வினோத் மீது மோதியது.
சோபிகா இன்பாக்ஸ் கொசுவலை தயாரிக்கும் நிறுவனம் இதனால் படுகாயமடைந்த வினோத்தை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே வினோத் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
கோயம்புத்தூர் மருந்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முன்னதாகவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.
இதையடுத்து வங்கல் காவல் துரையினர் அவரது உடலை மீட்டு கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஈச்சர் வாகன ஓட்டியான தமிழ்ச்செல்வனை (28) கைது செய்தனர்.
இதையடுத்து பல்வேறு கிளைகளைக் கொண்டு இயங்கி வரும் நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்ய, தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்வதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சட்டரீதியான இழப்பீட்டுத் தொகையை வழங்க அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க:பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது!