கரூர்: திருச்சிராப்பள்ளி ரவுடி சிலம்பரசன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர அதிமுக பொன்மலை செயலாளராக இருந்தவர் சேகர் (கேபிள் சேகர்). இவரை 2011ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி பட்டபகலில் அடையாளம் தெரியாத நபர்கள் ஓடஓட விரட்டி, வெட்டிப் படுகொலை செய்தனர்.
இந்தக் கொலை வழக்கில், கொலை செய்யப்பட்ட சேகரின் அண்ணன் பெரியசாமி, அவரது இரண்டாவது மனைவி பார்வதி, மகன் தங்கமணி சிலம்பரசன் உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்து காவல் துறையினர், நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இச்சூழலில், பிணையில் வெளியே வந்த சிலம்பரசனை, பழிக்கு பழி வாங்கும் விதமாக அண்ணாநகர், மேல அம்பிகாபுரம் பகுதியிலுள்ள அவரது வீட்டின் அருகேயுள்ள முட்காட்டில் மார்ச் 14ஆம் தேதி இரவு 11 மணியளவில் சேகர் தரப்பினர் சிலம்பரசனை ஓடஓட விரட்டி, வெட்டிப் படுகொலை செய்தனர். இக்கொலை வழக்கை திருச்சி அரியமங்கலம் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கரூர் நீதிமன்றத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் சேகர் மகன்கள் முத்துக்குமார் (28), சரவணன் (21), கோபிநாத் (20), துவாக்குடி காளியம்மன் கோயில் தெரு ஜெகநாதபுரத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் ரஞ்சித் உள்ளிட்டோர் நீதிபதி முன்பு கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சரணடைந்தனர். பின்னர் நால்வரையும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கொலை செய்யப்பட்ட சிலம்பரசன் மீது திருச்சி அரியமங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், அவர் பிரபல ரவுடி பட்டியலில் இருந்ததாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.