சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரான கே.சி. வீரமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் அவர் மீது செப். 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
அதடிப்படையில் நேற்று (செப். 16) வீரமணிக்கு தொடர்புடைய இடங்கள், அவரது பங்குதாரர்களின் நிறுவனங்கள், முன்னாள் அரசியல் நேர்முக உதவியாளரின் பெங்களூரில் உள்ள 2 இடங்கள், சென்னையில் 6 இடங்கள் என மொத்தம் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 10 மணி நேரமாக நடந்த இந்த சோதனையின் முடிவில், கணக்கில் காட்டப்படாத பணமான ரூ.34 லட்சத்து 1,060 ரொக்கம், 1.80 லட்சம் அந்நிய செலாவணி டாலர், 9 சொகுசு கார்கள், 4.987 கிலோ தங்கம், 7.2 கிலோ வெள்ளி பொருட்கள், 5 கணினிகள், ஹார்டு டிஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.