சென்னை: தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பரங்கிமலை லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் கந்தசாமி, பிரியா, காவலர்கள் நேற்று மதியம் 3.30 மணியிலிருந்து சோதனை நடத்தினர்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே தரகர்களாகச் செயல்பட்டவர்களின் கடைகளில் சோதனை நடத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் தாஸ்வேஜூகளைக் கைப்பற்றினர்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிமம், வாகன உரிமங்களைப் புதுப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தரகர்கள் மூலம் தரகுத்தொகை பெற்று பணிகள் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்குப் புகார் வந்ததைத் தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த தரகர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் ஆகியோரிடமும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
மோட்டார் வாகன ஆய்வாளர் அறை அருகிலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தளத்திலும், தாஸ்வேஜூகளுக்கு நடுவேயும் மறைத்துவைக்கப்பட்டிருந்த 70 ஆயிரத்து 600 ரூபாயை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைப்பற்றினர். முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரெய்டு ஏழு மணி நேரத்துக்குப் பிறகு இரவு 10 மணிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக அலுவலர்கள், ஊழியர்கள், தரகர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:செல்போன் திருடர்களை விரட்டிப் பிடித்த காவலரை வெகுமதியுடன் பாராட்டிய எஸ்பி