திருவனந்தபுரம்:கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாராசாலாவைச்சேர்ந்த ஷரோன் என்ற இளைஞரும், கிரீஷ்மா என்ற இளம்பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சில வாரங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்ததாகத் தெரிகிறது.
இதனிடையே கடந்த சில வாரங்களாக ஷரோனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி வாந்தி எடுத்ததால், அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் விஷம் அருந்தியதன் காரணமாகவே வாந்தி எடுத்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், விஷம் அருந்தியதால் உடல் உறுப்புகள் செயலிழந்து, கடந்த 25ஆம் தேதி ஷரோன் உயிரிழந்துவிட்டார்.
ஷரோனுக்கு திட்டமிட்டு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஷரோனை காதலித்த கிரீஷ்மா தான் விஷம் கொடுத்துள்ளார் என்றும் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். தங்களது மகன் கிரீஷ்மாவை சந்தித்துவிட்டு வரும்போதுதான் வாந்தி எடுத்ததாகவும், உடல் நலனுக்காக காதலி கஷாயம் கொடுத்ததாக தெரிவித்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் கிரீஷ்மாவை அழைத்து விசாரணை நடத்தினர். அவரிடம் சுமார் எட்டு மணி நேரம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.