சென்னை: குடிபோதையில் சந்தேகத்தின் பேரில் மனைவியை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு ஓடிய கணவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
ஆழ்வார்ப்பேட்டை, சி.வி ராமன் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி (70). இவருக்கு திருமணமாகி மல்லிகா (65) என்ற மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். முனுசாமி தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகின்றார்.
முனுசாமி தனது மனைவியுடன் மகன் தீர்த்தமலை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று (ஜூலை.09) மதியம் மகன் தீர்த்தமலை சுண்ணாம்பு கால்வாயில் உள்ள தனது அக்கா கலைச்செல்வியை அழைத்து வரச் சென்றுள்ளார்.
தொடர்ந்து மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது தாய் மல்லிகா உடலில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
தாயிடம் இது குறித்து கேட்டபோது தந்தை முனுசாமி குடிபோதையில் சந்தேகத்தின் பேரில் தன்னை வெட்டிவிட்டு ஓடிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். உடனே தாய் மல்லிகாவை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மல்லிகாவிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தீர்த்தமலை அளித்த புகாரின் பேரில், அபிராமபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய முனுசாமியை தேடிவந்தனர்.
இந்நிலையில் தனது சொந்த ஊரான திண்டிவனம் மயிலம் குரலூர் கிராமத்திற்கு தப்பி ஓடிய முனுசாமி இன்று (ஜூலை.10) அதிகாலை தனது வீட்டுத் திண்ணையில் அடையாளம் தெரியாத முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் மகன் தீர்த்தமலைக்கு தகவலளித்துள்ளனர். அவர் உடனே அபிராமபுரம் காவல் துறையினருக்கு தகவலளித்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 10 ஆண்டு கால தேடல்... மகனை பெற்றோருடன் இணைத்த ஆதார் கார்டு!