திருச்சி: மணப்பாறை பாத்திமாமலை பகுதியில் வசித்துவருபவர் சலவைத் தொழிலாளி சாந்தி. இவர் மதுரை சாலையில் உள்ள சாலையோர புளியமரத்தின்கீழ் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தள்ளுவண்டி வைத்து சலவைத் துணிகளை அயனிங் செய்து கொடுக்கும் வேலை செய்துவருகிறார்.
இந்நிலையில் சாந்தியிடம் நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர் அன்பழகன் சாலையோரம் தள்ளுவண்டி வைத்து வேலை செய்யக் கூடாது என்றும், அதற்கான நீதிமன்ற உத்தரவு தன்னிடம் உள்ளது என்றும், தள்ளுவண்டியை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதற்கு சாந்தியின் கணவர், “மணப்பாறை நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான தள்ளுவண்டி கடைகள் சாலையோரத்தில் இருக்கும்போது, போக்குவரத்திற்கு இடையூறு இன்றி நிறுத்தப்பட்டிருக்கும் எனது தள்ளுவண்டியை ஏன் அகற்றச் சொல்கிறீர்கள்? என்னால் யாருக்கும் இடையூறு இல்லை, யார் வீட்டின் முன்பும் வண்டி நிறுத்தவில்லை, மற்றவர்கள் எடுக்கும்போது நானும் எடுத்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
ஆனால் அதைக் கேட்க மறுத்த சாலை ஆய்வாளர் அன்பழகன், சாலைப் பணியாளர்கள் இருவருடன் சேர்ந்து சாந்தியின் தள்ளுவண்டியினை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து, மினி சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். சாந்தியிடம் தள்ளுவண்டியை நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் பறித்துச்செல்லும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
வாழ்வாதாரத்தை இழந்த பெண் தொழிலாளி இது தொடர்பாக மணப்பாறை காவல் நிலையத்தில் சாந்தி அளித்த புகார் மனுவில், “எனது வண்டியில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டுப்புடவைகள், கூலியாக பணம் ரூ.800, பைனான்ஸ் கட்ட வைத்திருந்த ரூ.10 ஆயிரம் ஆகியவற்றுடன் தள்ளுவண்டியை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி என்னை பழிவாங்கும் நோக்குடன் எடுத்து செல்லப்பட்டுள்ளது. தற்போது எனது வாழ்வாதாரம் முழுவதும் கேள்விக்குறியாக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மணப்பாறை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தின் வாசலிலேயே சாலையோர கடைகள் அதிக அளவில் இருக்கும்போது, ஒரே ஒரு சாலையோர தள்ளுவண்டியினை மட்டும் அகற்றியதும், அந்தத் தள்ளுவண்டியை அகற்றுவதில் சாலை ஆய்வாளர் காட்டிய ஆவேசமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கழிவுநீர் கலக்கக் கூடாது - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு