சென்னை: மயக்க ஊசி போட்டு கடத்தி 1 லட்சம் பணத்தை உளவுத்துறை தலைமை காவலரிடம் இருந்து பறித்த வழக்கில் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவலருக்கு லிப்ட்
சென்னை சூளைமேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி (45). மாநில உளவுத்துறையில் தலைமை காவலராக டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 28ஆம் தேதி, ரவி பணிக்காக செல்லும்போது அவருக்கு தெரிந்த நபரான அஜய் விக்கி என்பவர் காரில் வந்து தான் டிஜிபி அலுவலகம் வழியாக செல்வதாகவும், அங்கு அவரை விட்டு விடுவதாகவும்கூறி காரில் அழைத்து சென்றார். அப்போது அந்தக் காரினுள் அஜய் விக்கியின் நண்பர்கள் இருவர் இருந்தனர்.
மயக்க ஊசி செலுத்திய கும்பல்
இதையடுத்து ஓ.எம்.ஆர் சாலையில் தான் புதிதாக ஆரம்பித்துள்ள கடையை காண்பிப்பதாக கூறி அஜய் விக்கி காரிலேயே ரவியை அழைத்து சென்றார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றபோது பின்புறம் அமர்ந்திருந்த இருவர் திடீரென கையில் ஊசி ஒன்றை ரவி செலுத்திய நிலையில், அவர் மயக்க நிலைக்கு சென்றுள்ளார்.
பணம் பரிமாற்றம்
இதைத்தொடர்ந்து ரவியின் பையிலிருந்த செல்போனை எடுத்து கூகுள் பே வழியாக 1 லட்சம் ரூபாய் பணத்தை அவர்கள் தங்களது எண்ணுக்கு பரிமாற்றம் செய்துள்ளனர்..
பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது ஓ.எம்.ஆர். சாலையின் பிளாட்பாரத்தில் ரவி படுத்து கிடந்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக சூளைமேடு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் சூளைமேடு காவல்துறையினர் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து கடத்தல், உள் நோக்கத்தோடு கடத்தல், சிறைவைத்தல், வழிப்பறி, ஆபத்தான மருந்தை கொடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள அஜய் விக்கி மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
மேலும் ரவி கடத்தப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
கடத்தலில் தொடர்புடைய ஒருவர் கைது
இந்த கடத்தல் விவகாரம் தொடர்பாக ஒசூர் காவல்துறையினர் வாகன சோதனையின் போது விக்னேஷ்வரன் என்பவரை பிடித்து சென்னை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சென்னை தனிப்படை காவலர்களிடம் விக்னேஷ்வரனை ஒப்படைத்தனர்.பின்னர் விக்னேஷ்வரனை சென்னைக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உளவுத்துறை தலைமை காவலர் ரவியை கடத்திய விவகாரத்தில் விக்னேஷ்வரனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: காவலருக்குப் 'பளார்' - கத்தியைக் காட்டி மிரட்டிய லாரி ஓட்டுநர் கைது