சென்னை:இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் (Srilankan airlines) பயணிகள் சிறப்பு விமானம் நேற்று (ஜனவரி 31) இரவு சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் கண்காணித்து சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது சென்னையைச் சோ்ந்த மூன்று பெண்கள், ஒரு குழுவாக அந்த விமானத்தில் வந்தனர். அவா்கள் தங்களிடம் சுங்கத்தீர்வை செலுத்துவதற்கான பொருள்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றனர்.
ஆனால் சுங்க அலுவலர்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை நிறுத்தி மீண்டும் உள்ளே அழைத்துவந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அளித்த பதில் முரண்பட்டதாக இருந்தது.
கூந்தலுக்குள் மறைத்து தங்கம் கடத்தல்
இதையடுத்து பெண் சுங்க அலுவலர்கள் இந்த மூன்று பெண் பயணிகளையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று, அவர்களைச் சோதனையிட்டனர். அப்போது அந்தப் பெண்கள் தலையில் அணிந்திருந்த 'விக்' எனப்படும் அலங்கார கூந்தலுக்குள் தங்க வளையல்கள், சிறு தங்கக்கட்டிகளை மறைத்துவைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.
அத்தோடு அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்கப்பசைகள் அடங்கிய சிறிய நெகிழிப் பாக்கெட்களை மறைத்துவைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர்.
மூன்று பெண் பயணிகளிடமிருந்து மொத்தம் 525 கிராம் தங்கத்தை சுங்க அலுவலர்கள் பறிமுதல்செய்தனர். அவற்றின் பன்னாட்டு மதிப்பு 23 லட்சம் ரூபாயாகும். இதையடுத்து நூதன முறையில் தலை கூந்தலுக்குள் தங்கத்தை வைத்து கடத்திவந்த மூன்று பெண்களையும் சுங்க அலுவலர்கள் கைதுசெய்தனர். அவா்களிடம் மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க:பாலியல் தொழில் செய்துவந்த புரோக்கர் கைது