ஆக்ரா:உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் தாஸ்கஞ்ச் காவல் நிலையத்திற்குள்பட்ட ஃபதேஹாபாத் சாலையில் உள்ள உணவக விடுதியில் ஒரு சிறுமியை இருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9) இரவில் நடந்துள்ளது.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பிடியிலிருந்து தப்பிய குர்ஜாவைச் சேர்ந்த சிறுமி உத்தரப் பிரதேச காவல் துறையின் 112 என்ற அழைப்புதவி எண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை 11 மணிக்கு அழைத்தார். மேலும், தான் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாக காவல் துறையிடம் தகவல் தெரிவித்தார்.
தனக்குத் தீங்கிழைத்த இருவரில் ஒரு இளைஞரைத் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், ஏற்கனவே பலமுறை அவரைச் சந்தித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்தார். அச்சிறுமி மேலும் கூறுகையில், 'எனக்குத் தெரிந்த அந்த நபர் என்னுடன் பேச வேண்டும் என்று கூறி ஒரு காரில் ஏற்றிக்கொண்டு ஒரு உணவக விடுதிக்கு அழைத்துச் சென்றார். அப்போது, அந்நபருடன் இணைந்த மற்றொருவரும் என்னிடம் கொடூரமான முறையில் நடந்துகொண்டனர்' என்றார்.
இருவரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த பின் அங்கிருந்து தப்பியோடினர். சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில், புகாரின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிந்து தப்பியோடிய இருவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்" என்றனர்.
இதையும் படிங்க: 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார் வந்தால் அரை மணிநேரத்தில ஸ்பாட்ல இருக்கணும்' - காவல்துறையினருக்கு அறிவுறுத்திய டிஜிபி