சென்னை:வடமாநிலங்களை சேர்ந்த சைபர் கிரைம் கும்பல், வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை ஆன்லைன் மூலம் கொள்ளையடிப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் சென்னையை சேர்ந்தவர்களிடம் சைபர் கிரைம் கும்பல், நூதன முறையில் பணத்தை சுருட்டியுள்ளது. இதுதொடர்பாக சென்னை தென்மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பணத்தை பறிகொடுத்தவர்களில் பெரும்பாலோர் வழக்கறிஞர்கள், ஐடி நிறுவன பணியாளர்கள் எனவும் கூறப்படுகிறது.
ஆன்லைன் மோசடி குறித்து சென்னை தென்மண்டல சைபர் கிரைம் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், ஆன்லைனில் வேலை தேடுபவர்கள், வங்கியின் KYC (உங்கள் வாடிக்கையாளர்களை அறிவீர்களா?) தகவல்களை அப்டேட் செய்வர்களை குறிவைத்து இந்த மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட வங்கியின் இணையதள முகவரியை போலியாக உருவாக்கும் சைபர் கிரைம் கும்பல், KYC விவரங்களை அப்டேட் செய்யுமாறு, வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அதை உறுதி செய்யும் வகையில், வங்கியில் இருந்து பேசுவதாக செல்போனிலும் தொடர்பு கொள்கின்றனர்.
இதையடுத்து வாடிக்கையாளர்கள் போலியான இணையதளத்தை தொடர்பு கொள்ளும் போது, அவர்களது அனைத்து தகவல்களையும் திருடி விடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் பெயரில், அதே வங்கியில் ஆன்லைன் மூலம் பல லட்சத்தை கடனாக பெற்று அந்த பணத்தையும் சுருட்டி விடுகின்றனர்.