ஈரோடு: கோபி கடைவீதியில் நகை கடை நடத்தி வரும் கானாஜி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் ஈரோட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் கோபிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு நபர்கள் வழிமறித்து போலீஸ் என கூறி அவர் பையில் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர்.
அதேபோல் கவுந்தப்பாடி நால்ரோட்டில் மளிகை கடை நடத்திவரும் சையது முகமது என்பவரது கடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொள்ளைபடிக்கபட்டது.
கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையத்தில் கடந்த மே மாதம் ஓய்வு பெற்ற ஆசிரியர் டேவிட் சூசை மாணிக்கம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 58 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
கோபி அருகே உள்ள தவிடம்பாளையம் பிரிவில் கடந்த ஆகஸ்ட் மாதம், ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் பீடி சிகரெட், டூத் பேஸ்ட், உள்ளிட்ட ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் என 35 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம், சின்னாரி பாளையத்தில் குன்னமரத்தையன் அம்மன் கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர், அங்கு இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து சுமார் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கோபி அருகே கரட்டடிபாளையத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் உரக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 60 ரூபாய் பணம், வங்கி காசோலை, பாஸ்புக் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோபி,கவுந்தபாடி,சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கோபி தனிப்படை போலீசார், நகை கடை கானாஜியிடம் வழிப்பறி செய்த கோபி புதுப்பாளையத்தை சேர்ந்த ஜெகன் மற்றும் கோபி கமலா ரைஸ் மில் விதியைச் சேர்ந்த நந்தகுமார் ஆகியோரையும், கோபி நல்ல கவுண்டம்பாளையம் டேவிட் சூசை மாணிக்கம் வீட்டின் பூட்டை உடைத்து 20 லட்சம் ரூபாய் மற்றும் 58 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் பவளமலையை சேர்ந்த பாஷில் என்பவரையும், போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து கோயில் உண்டியல், மளிகை கடை பூட்டை உடைத்து கொள்ளையடித்தது, கரட்டடி பாளையம் உரக்கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த பொலவக்காளிபாளையத்தை சேர்ந்த கந்தன் என்கிற கிருபாகரனையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் இருந்த 25 சவரன் நகையை பறிமுதல் செய்த போலீசார் கோபியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:சிவகாசி பத்ரகாளி அம்மன் கோயிலின் கோபுரத்தில் தீ விபத்து - நடந்தது என்ன?