சென்னை: கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை, சண்முகபுரம் பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது, அங்கு 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக மூட்டை, முடிச்சுகளுடன் நின்றுகொண்டு இருந்ததைக் கண்டனர். அவர்களை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில், சாக்கு மூட்டைகளில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் இருந்த 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து 4 பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த முருகேசன் (42), மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா (28), ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த தனலட்சுமி (28), விஜயவாடாவைச் சேர்ந்த மயிலா (39) ஆகியோர் என தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் விற்பனை செய்ய இருந்தது அம்பலமானது. காவல் ஆய்வாளர் ராஜி தலைமையிலான காவலர்கள் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நால்வரையும் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.