திருநெல்வேலி: தின்பண்டத்திற்கு காசு கொடுக்காமல் சென்ற 10 வயது சிறுமியை, வளர்ப்பு தந்தை தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ், தனது மனைவியுடன் சேர்ந்து, திருநெல்வேலி மாவட்டம் பணக்குடியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அந்தோணிராஜ் மனைவி சுஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். இவரது கடைசி மகள், பணக்குடி பகுதியில் உள்ள அடுமனை கடைக்கு சென்று தின்பண்டங்களை எடுத்ததாகக் கூறப்படுகிறது. காசு கொடுக்காமல் சிறுமி தின்பண்டங்களை எடுத்துச் சென்றது குறித்து அடுமனை உரிமையாளர், வளர்ப்பு தந்தை அந்தோணிராஜிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அதற்கான தொகையைக் கொடுக்காமல், தின்பண்டங்களை எடுத்ததற்காக வீட்டிற்கு சென்ற அந்தோணிராஜ், குழந்தைகள் மூவரையும் அழைத்து அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றியுள்ளார். இதில், சுதாரித்துக்கொண்ட மூத்த வளர்ப்பு மகள்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
ஆனால், 10 வயதே நிரம்பிய கடைக்குட்டி மகள் மீது தீ வைத்து கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் அந்தோணி. அப்போது சிறுமி ‘அப்பா... அப்பா ... என்னை காப்பாத்துங்க’ என்று அலறியபடி, அந்தோணிராஜை அணைத்துள்ளார். இதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.