திருவண்ணாமலை: மீன் வியாபாரியை சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மீன் வியாபாரி கிறிஸ்துவராஜ் (41). இவரது மனைவி ரேகா. 10 நாட்களுக்கு முன்பு ரேகாவின் தந்தை மரணமடைந்ததால், அவர் குழந்தைகளுடன் சென்னையில் இருக்கும் அவரது தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார்.
கிறிஸ்துவராஜ் மட்டும் திருவண்ணாமலை வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று முந்தினம் (மே.22) காலையில் கிறிஸ்துவராஜ் வீட்டிற்கு மீன் வியாபாரி ஒருவர் வந்துள்ளார். அப்போது,வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கிறிஸ்துவராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதுகுறித்து, தச்சம்பட்டு காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், காவல் இணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை , காவல் ஆய்வாளர் அழகுராணி, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, உடலைக்கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கிறிஸ்துவராஜூவின் அண்டைவீட்டாரின் உறவினரான விழுப்புரம் மாவட்டம், ஈருடையான்பட்டு கிராமத்தை சேர்ந்த சிறுவன், கிறிஸ்துவராஜ் உடன் தங்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.
அதில், ஊரடங்கு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு, தச்சம்பட்டு கிராமத்திலுள்ள தனது மாமா வீட்டிற்கு வந்த சிறுவனுக்கும் கிறிஸ்துவராஜூக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அவரிடம் அதிக பணம் இருப்பதை அறிந்த சிறுவன், கிறிஸ்துவராஜூவின் மனைவி, குழந்தைகள் வீட்டில் இல்லாததை அறிந்து கொண்டு,அவரை கொலை செய்து பணத்தைத் திருட திட்டமிட்டுள்ளான்.
அதனால் கிருஸ்துவ ராஜ் உடன் நெருக்கமாக பழகியுள்ளான். அதன்படி, மே 21ஆம் தேதி சிறுவன் மது குப்பிகளுடன், கிறிஸ்துவராஜூவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மட்டும் மதுவை ஊற்றி கொடுத்து, கொலை செய்வதற்கான தக்க சமயத்தை எதிர்நோக்கி காத்திருந்துள்ளான்.
இச்சூழலில், போதை தலைக்கேறி இருந்த கிறிஸ்துவராஜூவின் கழுத்தை அறுத்து, அவரிடம் இருந்த ரூ.18 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு சிறுவன் தப்பி சென்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் சிறுவனை திருவண்ணாமலை சிறார் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.