தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

மதுவுக்கு அடிமையான மகனை கொலை செய்த தந்தை கைது! - ஈரோடு மாவட்ட சிறை

சத்தியமங்கலம் அருகே மதுவுக்கு அடிமையான மகனை மூங்கில் கட்டையால் அடித்துக்கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 22, 2023, 7:48 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கானக்குந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்தநாயக்கர் (வயது 65). விவசாயியான இவருக்கு பாப்பம்மாள் என்ற மனைவியும், செல்வன், முருகன் (வயது 33) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். செல்வனுக்கு திருமணமான நிலையில் அவர் சத்தியமங்கலம் அருகே உள்ள கெஞ்சனூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

பெத்தநாயக்கரின் இளைய மகன் முருகன். கூலி வேலை செய்து வந்த முருகனுக்கு மதுப்பழக்கம் உள்ளதால் அவ்வப்போது தனது தந்தை பெத்தநாயக்கரிடம் பணம் கேட்டும், வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்க கோரியும் சண்டையிடுவது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மது போதையில் இருந்த முருகன் தனது தந்தை பெத்தநாயக்கரிடம் தகராறு செய்த போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பெத்தநாயக்கர் அருகில் இருந்த மூங்கில் கட்டையை எடுத்து முருகனின் தலையில் தாக்கியதில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெத்தநாயக்கர் மகன் முருகனின் உடலை அருகே தனது விவசாய தோட்டத்தில் இருந்த சோளத்தட்டிற்குள் மறைத்து வைத்துவிட்டு வனப்பகுதிக்குள் ஓடி தலைமறைவானார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கடம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோளத்தட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து வனப்பகுதிக்குள் ஓடி தலைமறைவான பெத்த நாயக்கரை போலீசார் தேடி வந்த நிலையில், சனிக்கிழமை கடம்பூர் காவல்நிலையத்தில் பெத்தநாயக்கர் சரணடைந்தார். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: WEEKLY HOROSCOPE: ஜனவரி 4 ஆம் வார ராசிபலன்.. எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது?

ABOUT THE AUTHOR

...view details