காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே உள்ள கீரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபாவதி. இவரது தந்தை கடந்த ஜூலை 23ஆம் தேதி, பிரபல ரவுடியான படப்பை குணாவிடம் தனக்கு சொந்தமான நிலப்பத்திரத்தை அடமானம் வைத்து ரூ. 2 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் நிலத்தின் சந்தை மதிப்பு விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்பிய ரூபாவதி, பட்டாவை பெற்று சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து வாங்கிய பட்டாவை திரும்ப அளிக்கும்படி ரவுடி குணா ரூபாவதியை மிரட்டியுள்ளார்.
கொலை செய்துவிடுவதாக மிரட்டல்
ஒரு கட்டத்தில் ரூபாவதி வீட்டுக்கு சென்ற ரவுடி குணாவின் ஆள்கள், ஆபாசமாக பேசி ஆவணங்களைக் கேட்டுள்ளனர். மேலும் ஆவணங்களைத் தரவில்லை எனில் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த ரூபாவதி, ரவுடி குணா, அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ரவுடி குணாவை தேடி வந்தனர்.
காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் ரவுடி குணாவை கைது செய்ய, காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் உத்தரவிட்டார். அதன்பேரில் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர், குணாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
பிணை விடுதலை - மீண்டும் சிறைவாசம்
அதன் பின்னர் அவர் காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பிரபல ரவுடி குணா மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி திருந்தி வாழ நினைப்பதாகவும், தனக்கு ஓர் வாய்ப்பளிக்கும்படியும் குணா கோரிக்கை விடுத்திருந்திருந்தார்.
கோரிக்கையை பரிசீலித்த ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர், ஓராண்டு நன்னடத்தை பிணையில் ரவுடி குணாவை விடுவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருந்தி வாழ நினைத்த ரவுடி, மீண்டும் சிறை சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:வரதட்சணை கொடுமை- மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கணவர்