பல்லியா (உத்தரப் பிரதேசம்) : மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக அநாகரீக கோஷங்கள் எழுப்பியதாக முன்னாள் அமைச்சர் மற்றும் அவரின் மகன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக உபேந்திரா திவாரி உள்ளார். இவர் மற்றும் இவரது குடும்பத்தினரை இழிவாக கூறி சிலர் முழக்கமிடும் காணொலிகள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகின.
இது தொடர்பாக உபேந்திரா திவாரி, சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். இது தொடர்பான புகாரில், “தோல்வியை பொறுத்துக்கொள்ள முடியாத அவர்கள் என் தாய் மற்றும் மகள்களை இழிவுப்படுத்துகின்றனர்” எனவும் கூறியிருந்தார்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் அம்பிகா சவுத்ரியின் மகனான ஆனந்த் சவுத்ரி உள்பட 10 பேர் மீது உத்தரப் பிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி பல்லியாவில் உள்ள பாஜக தலைவர்கள் காவல் கண்காணிப்பாளர் விபின் தடாவை சந்தித்தனர். ஆனந்த் சவுத்ரி, அவரது தந்தை அம்பிகா சவுத்ரி சமாஜ்வாதி தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் அம்பிகா சவுத்ரி மற்றும் அவரது மகன் ஆனந்த் சவுத்ரி ஆகியோர் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பிகா சவுத்ரி சமாஜ்வாதி ஆட்சியிலிருந்தபோது அமைச்சராக பொறுப்பு வகித்தார். தொடர்ந்து அதிருப்தி காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் 2017இல் இணைந்தார்.
தற்போது பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இவர் மீண்டும் சமாஜ்வாதி கட்சிக்கு திரும்பவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : நடிகை பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது