திருப்பத்தூர்: வாணியம்பாடியைச் சேர்ந்தவர் பிரகாசம் (47). இவர் ஆம்பூர்பேட்டையில் உள்ள தனது மனைவி, மகன், மகள்கள் ஆகியோருடன் வசித்து வருகிறார். பிரகாசம் முன்னாள் அதிமுக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபிலிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், பிரகாசம் கடந்த மே 3ஆம் தேதி காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில், அவரின் நெருங்கிய உறவினர்களான ஜாஃபர், இத்திரிஸ் கபில், முகமது காசிப், வாகித் ஆகிய நான்கு பேர் மீதும் பண மோசடி குறித்து இணைய வழியில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதையடுத்து, இன்று (மே.22) சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த பிரகாசம், "நிலோஃபர் கபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியபோது, தனது தொழிலாளர் நலத்துறையிலும், வக்பு வாரியத்திலும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 108 நபர்களிடம் ஆறு கோடி ரூபாய் பணம் பெற்றார். பணம் அளிக்க வந்தவர்களிடம் அந்தப் பணத்தை உதவியாளராக இருந்த தன்னிடம் நேரடியாகக் கொடுக்கச் சொல்லியும், தனது வங்கி கணக்கில் செலுத்தச் சொல்லியும், காசோலையாகவும் பெற்றுக் கொண்டார்.
பணம் பெற்றபின் கரோனா நோய்த் தொற்றைக் காரணம் காட்டி, சொன்னபடி வேலை வாங்கித் தராமலும், வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமலும் அமைச்சரும் அவரது உறவினர்கள் மூன்று பேரும் பணம் கொடுத்தவர்களை அலைக்கழித்து வந்துள்ளார்.
இதனால், முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபிலுக்கு இந்தத் தேர்தலில் இடமில்லை என்ற அறிவிப்பு வெளிவந்தபின் பணம் அளித்தவர்கள் அமைச்சர் மீது மட்டுமல்லாமல், என் மீதும் காவல் நிலையங்களில் புகார் அளித்தும், நேரடியாக பணம் கேட்டு என்னையும், என் குடும்பத்தாரையும் தொந்தரவு செய்து மிரட்டி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.