சென்னை: வருமானத்திற்கு அதிகமாக 3 ஆயிரத்து 928 விழுக்காடு சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், அன்பரசனின் மனைவி ஹேமலதா, பங்குதாரர் சந்திரசேகர், சந்திரபிரகாஷ் உட்பட 13 பேர் மீது கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
அதனடிப்படையில், இன்று (மார்ச் 15) எஸ்.பி. வேலுமணி மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக, கோயம்புத்தூரில் 42 இடங்கள், சென்னையில் 7, திருப்பூரில் 2, சேலம் 4, நாமக்கல் , கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு இடத்திலும் சோதனையானது நடைபெற்றது.
முக்கிய ஆணவங்களும் சிக்கின
இந்த சோதனையில் தங்க நகைகள் 11.153 கிலோ கிராம், 118.506 கிலோ கிராம் வெள்ளி நகைகள் மற்றும் கணக்கில் வராத 84 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் கைப்பேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள் (Locker Key), மடிக்கணினி, கணினி ஹார்ட்-டிஸ்குகள், வழக்கிற்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சுமார் 34 லட்சம் ரூபாய் அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகள் மூலமாக முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி; இதோ முழுப்பின்னணி