தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

குடிபோதையில் ஐடி ஊழியர் செய்த காரியம்: காலை இழந்த காவலாளி - சென்னை செய்திகள்

காலைப் பொழுதிலே குடிபோதையில் வாகனத்தைச் செலுத்திய மென்பொருள் நிறுவன ஊழியர், சாலையில் நடந்துசென்ற வணிக வளாக காவலாளி மீது மோதியதில், அவரது கால் துண்டானது. விபத்தில் சிக்கிய காவலாளி உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை விபத்து
சென்னை விபத்து

By

Published : Sep 2, 2021, 6:43 PM IST

சென்னை: குடிபோதையில் மென்பொருள் நிறுவன ஊழியரின் கார் விபத்து ஏற்படுத்தியதில், காவலாளியின் கால் துண்டான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் (65), சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தங்கியிருந்து பணியாற்றிவருகிறார்.

இன்று காலை கண்ணன் தான் வேலை செய்துவந்த வணிக வளாகத்திலிருந்து வெளியே வந்து ராயப்பேட்டை திருவிக நெடுஞ்சாலையின் நடைமேடையில் நடந்துசென்றார். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று நடைமேடை மீது ஏறி நடந்துசென்ற கண்ணன் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே கண்ணனின் கால் துண்டானது. வலி தாங்க முடியாமல் கதறியபடியே கண்ணன் மயங்கி விழுந்தார். கார் ஓட்டிவந்த நபர் தப்பி ஓட முயன்றார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் மது அருந்தி போதையில் இருந்தது தெரிந்தது.

காவல் துறை விசாரணை

உடனடியாக சம்பவம் குறித்து தகவல் அறிந்த அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று கால் துண்டான நிலையில் கிடந்த கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

பொதுமக்கள் பிடித்த நபரை அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் கைதுசெய்து காவல் நிலையத்திற்கு கொண்டுசென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அண்ணாநகரைச் சேர்ந்த சுதாகர் (54) என்பது தெரிந்தது. அவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.

ஆல்கஹாலால் நிறைந்திருந்த கண்ணன்

சுதாகரை மருத்துவமனைக்கு கொண்டுசென்று பரிசோதனை மேற்கொண்டதில் அவரது ரத்தத்தில் 210 விழுக்காடு ஆல்கஹால் அளவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய நபர்

இதனையடுத்து சுதாகரை கைதுசெய்த காவல் துறையினர், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 308- கொலையாகாத வகையில் குற்றம் செய்தல், மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளான 185- குடிபோதையில் வாகனத்தை ஓட்டுதல், 184- அபாயகரமாக வாகனத்தை ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

நேரில் பார்த்தவர் சாட்சி

விபத்தை நேரில் பார்த்தவரும், வணிக வளாகத்தில் தனியார் நிறுவனம் நடத்திவருபவருமான ராஜேஷ் கூறுகையில், "காரை ஓட்டிவந்தவர் குடிபோதையில் இருந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்ப முயன்றார்.

காவலாளி கண்ணனின் கால் துண்டாகிவிட்டது. ஏற்கனவே கண்ணனது மகன் கரோனாவால் இறந்துவிட்டார். தற்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் துண்டாகிவிட்டது. அவரது குடும்பத்தினருக்கு அரசு உதவ வேண்டும்" என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கண்ணன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சிவகங்கையில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்குச் சம்பவம் குறித்து காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை விபத்து குறித்த காணொலி

கண்ணனின் பேரனுக்கு நாளை திருமணம் நடைபெறவுள்ளது. அதற்காக இன்று சொந்த ஊருக்கு கண்ணன் செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்குள் விபத்தில் சிக்கி அவரது கால் துண்டாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details