சென்னை: ஜாம்பஜார் முகமது ஹுசைன் சந்து பகுதியைச் சேர்ந்தவர் வித்தியகுமார் (32). இவர் திமுக 115ஆவது பகுதி இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்துவந்தார்.
இவருக்கு கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் நிஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக வித்தியகுமாருக்கும் அவரது மனைவி நிஷாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று(அக்.4) வீட்டிலிருந்த வித்தியகுமார், தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஜாம்பஜார் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், வித்தியகுமாரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பிவைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வித்தியகுமாரின் செல்போனில் அவரால் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்று கண்டறியப்பட்டது.
அந்தப் பதிவில், “தனது மனைவி நிஷா, அவரின் சகோதரி உஷா, அவரின் கணவர் கண்ணன் ஆகியோர் பல வகைகளில் என்னை துன்புறுத்தி வந்தனர். கணவர் என்றும் பாராமல் என் மனைவி என்னை அடிப்பார், அவரின் சகோதரி உள்ளிட்ட உறவினர்கள் தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்துவார்கள். அவர்களால் ஏற்பட்ட துன்புறுத்தல்கள் தாங்க முடியாமல் தற்போது தற்கொலை முடிவை எடுத்துள்ளேன். எனது சாவிற்கு மனைவி நிஷா, உஷா, கண்ணன் ஆகிய மூவரும் தான் முழு காரணம், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்” என வித்தியகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜாம்பஜார் காவல்துறையினர், வித்திய குமாரின் மனைவி நிஷா மற்றும் அவரின் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு!