திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அடுத்த அரியநாயகி புரத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (42). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்து ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள தனது கோழிப்பண்ணைக்கு நேற்று (பிப்.18) புறப்பட்டுச் சென்றார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் செல்லத்துரையின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் செல்லத்துரையை மீட்டு முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லத்துரை உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.