மதுரை:முன்விரோதம் காரணமாக, திமுக பிரமுகர் ஒருவர் அடியாட்களுடன் அதிமுக பிரமுகரின் கடையை அடித்து உடைக்கும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகருக்குச் சொந்தமான அடுமனை ஒன்று உள்ளது. தற்போது கரோனா ஊரடங்கால் இந்த கடை பூட்டப்பட்டுள்ளது. இச்சூழலில், திமுக வாடிப்பட்டி இளைஞரணி செயலாளர் அசோக், தனது ஆதரவாளர்களுடன் பட்டாக்கத்திகளை கையில் ஏந்தியபடியே கடை வெளியே இருந்த பொருட்களை அடித்து துவம்சம் செய்தார்.
பொதுமக்களை அச்சுறுத்திய திமுக பிரமுகர்
கடையைத் தொடர்ந்து, அங்கிருந்த பொது சொத்துகளையும் அவர்கள் அடித்து உடைத்ததோடு, சாலையில் சென்றவர்களையும் பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டினர். இவர்களின் இந்த செயலைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் தெறித்து ஓடினர். இதைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து அனைவரும் தப்பிச் சென்றனர்.
திமுக பிரமுகர் தனது அடியாட்களுடன் மிரட்டும் காட்சி மரண பயத்தில் இருந்த மக்கள், இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கும், அடுமனையின் உரிமையாளருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணைக்குப்பின்னர், அடுமனை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திவிட்டு தலைமறைவான திமுக பிரமுகருடன் சேர்த்து நால்வரையும் தேடி வருகின்றனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தால், திமுக பிரமுகர், அதிமுகவினருக்குச் சொந்தமான கடையை அடித்து நொறுக்கிவிட்டு தப்பியதாக, காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.