சென்னை: ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த மஞ்சுளா பட் என்பவருக்குச் சொந்தமான 5.5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அவர் இறந்ததைப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரித்துள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில்ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த அக்மாலுதீன் என்பவர் மஞ்சுளா பட் என்பவருக்குச் சொந்தமான இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அதன்மூலம் அபகரித்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அக்மாலுதீனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 2013ஆம் ஆண்டு அக்மாலுதீன் மஞ்சுளா பட் என்பவரை அணுகி பெயரளவில் மட்டுமே பதிவுசெய்யப்பட்ட தனது நிறுவனத்தை நடத்துவதாகக் கணக்கு காட்டி அவருக்குச் சொந்தமான 5.5 கோடி ரூபாய் மதிப்புடைய வீட்டை குத்தகை ஒப்பந்தமிட்டு பதிவுசெய்தது தெரியவந்தது.
அதன்பின் 2016ஆம் ஆண்டு மஞ்சுளா பட் இயற்கை எய்திய நிலையில், அதுபற்றி தெரியாமலேயே கடந்த ஐந்து ஆண்டுகளாக மஞ்சுளா பட் என்பவரின் கையெழுத்தை தானே இட்டு குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்து பதிவு செய்து வந்ததும், கேட்பாரில்லாத காரணத்தால் குத்தகைப் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி இடத்தை ஆக்கிரமித்து வந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் அக்மாலுதீனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'கட்சி மாறினால் வீடு புகுந்து வெட்டுவேன்' - அதிமுக பிரமுகர் மிரட்டல் பேச்சு