ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. இவர் புஞ்சை புளியம்பட்டியில் வாடகை கார் வைத்து தொழில் நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று (ஜன.8) இரண்டு நபர்கள் புஞ்சை புளியம்பட்டியில் இருந்து கோயம்புத்தூர் செல்ல வேண்டும் கார் வாடகைக்கு தேவை எனக் கேட்டுள்ளனர்.
அப்போது ராஜேஷ்கண்ணா, புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த கோபால் என்ற ஓட்டுனரை காரை ஓட்டுமாறு கூறியதையடுத்து, அவர்கள் இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டு கோபால் கோயம்புத்தூர் நோக்கி சென்றுள்ளார். சரவணம்பட்டி அருகே சென்ற போது காரில் வந்த இருவரும் டீ சாப்பிட வேண்டும் எனக் கூறியதால் ஓட்டுநர் கோபால் காரை நிறுத்தியுள்ளார்.
அதன்பிறகு ஓட்டுநர் கோபால், டீ சாப்பிட்டுவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக சிறிது தூரம் சென்ற போது காரில் வந்த இருவரும் காரின் அருகே செல்போன் பேசுவது போல் திடீரென காரை எடுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அதிவேகமாக தப்பினர்.