சென்னை: மீனம்பாக்கம் சா்வதேச விமானநிலையத்திலிருந்து சார்ஜா செல்லும் ஏா் அரேபியா பயணிகள் விமானம் இன்று அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்தவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது சேலத்தை சேர்ந்த சதீஷ்குமார் (34) என்பவர் இந்த விமானத்தில் சார்ஜா செல்லவந்தார். அவருடைய பாஸ்போா்ட்டை குடியுரிமை அலுவலர்கள் கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்தனர். அப்போது பயணி சதீஷ்குமார் மீது சேலம் மாவட்ட குற்றப்பிரிவிலும், சேலம் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது.
மேலும் இவர் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்தது. மேலும் விசாரிக்கையில், சேலம் மாநகர காவல் ஆணையர், சதீஷ்குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளார். எனவே இவர் காவல்துறை கைதுக்கு பயந்து வெளிநாடு தப்பி செல்ல முயற்சிக்கிறார் என்று தெரியவந்தது.
இதையடுத்து குடியுரிமை அலுவலர்கள் சேலம் பயணி சதீஷ்குமாரின் சார்ஜா பயணத்தை ரத்து செய்து, அவரை தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர். உடனே சேலம் மாநகர காவல் ஆணையருக்கு தேடப்படும் தலைமறைவு குற்றவாளி சதீஷ்குமாா் சென்னை விமானநிலையத்தில் சிக்கிய தகவலை அவரசமாக தெரியப்படுத்தினர். இதையடுத்து சேலம் மாநகர தனிப்படை காவல்துறையினர் சென்னை விமானநிலையம் நோக்கி புறப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வேலூரில் மிளகாய்ப் பொடி தூவி ரூ.2.75 லட்சம் வழிப்பறி: மூவர் கைது